Tuesday, March 9, 2010

ஆயுர்வேதம்: இளமை...இதோ!​ இதோ!

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: இளமை...இதோ!​ இதோ!

திருமணமான என் அண்ணனுடன் எனக்குப் பெண் பார்க்கச் சென்றேன்.​ அண்ணனை மாப்பிள்ளை என நினைத்து உபசரிக்கத் தொடங்கிவிட்டார்கள்.​ காரணம்,​​ எனக்கு 30 வயதுதான் ஆகிறது என்றாலும்,​​ தலைமுடி,​​ மீசையில் நரை எட்டிப் பார்க்கத் தொடங்கிவிட்டது.​ இளமையிலேயே முதுமை வரத் தொடங்கிவிட்ட எனக்கு,​​ மறுபடியும் இளமையுடன் அழகாக மாற வழி என்ன?

கனகவேல்,​​ தூத்துக்குடி.

இன்றைய வாழ்க்கைமுறையில் இளைஞர்களுக்கு ஓர் ஆண்டில் இரு வயது கூடுகிறது.​ தான் படித்த கல்விக்கு ஏற்றவாறு வேலை அமையாமற் போனாலோ,​​ தன் கூடப் படித்தவர்கள் தன்னைவிட வாழ்க்கையில் நல்லமுறையில் வேலை கிடைத்துப் பணியில் அமர்ந்துவிட்டாலோ ஏற்படும் மனப் புழுக்கம்,​​ முதுமைக்கு விரைவில் வித்திடுகிறது.​ மனதில் ஏற்படும் இந்த தாபம்,​​ உடற்சூட்டை அதிகரித்து தோலைச் சார்ந்த ப்ராஜகம் என்னும் பித்தத்தைச் சூடாக்குகிறது.​ நெல் விளையும் செடியின் வேர் பதிந்துள்ள நிலத்தில்,​​ நீர் குறைந்து உரம் கூடி,​​ வெயிலின் தாக்கமும் அதிகரித்தால்,​​ செடி பழுத்து விடுவதைப் போல,​​ மயிர்க்கால்கள் பதிந்துள்ள தோலில் எண்ணெய்ப் பசை குறைந்து,​​ ப்ராஜக பித்தத்தின் சூடும் கூடும்போது,​​ மயிர்க்கால்களின் வழியாக,​​ நுனிவரை முடி நரைத்து விடுகிறது.​ ஆக,​​ தேக ஆரோக்கியத்தின் ​ பாதுகாப்பானது மனதிலிருந்து தொடங்குகிறது.

என்றும் இளமையுடன் அழகாக இருக்க விரும்பும் நீங்கள் ஆயுர்வேதம் உபதேசிக்கும் அனுதைலம் எனும் மூக்கில் விட்டுக் கொள்ளும் மருந்தை இரண்டு சொட்டு காலை,​​ இரவு பல் தேய்த்த பிறகு விட்டுக் கொள்ளவும்.​ மூக்கில் விட்டவுடன் தலைப் பகுதியில் சேர்ந்துள்ள தேவையற்ற கபதோஷத்தையும்,​​ மேலும் பல அழுக்குகளையும் கரைத்து,​​ வாய்ப் பகுதிக்கு வந்தவுடன் காரி உமிழ்ந்துவிடவும்.

கண்களுக்கு இளநீர் குழம்பு இரண்டு சொட்டு இரவில் படுக்கும் முன் விட்டுக் கொள்வதால்,​​ நாள் முழுவதும் கண்ணில் சேர்ந்துள்ள தூசும் மாசும் கண்ணிலிருந்து நீராக வடிவதன் மூலம் வெளியேறிவிடும்.​ இந்த அனுதைலமும்,​​ இளநீர்க் குழம்பும் விட்டவுடன் எரிச்சலைத் தந்தாலும்,​​ சிறிது நேரத்திற்குப் பிறகு குளிர்ச்சியைத் தருகின்றன.​ அரிமேதஸ் தைலம்,​​ சிறிது வாயிலிட்டு உமிழ்நீர் சுரந்தவுடன் வாயினுள் குலுக்கித் துப்பிவிட,​​ வாயிலுள்ள பகுதி முழுவதும் சுத்தமடைவதன் விளைவாக,​​ உணவைச் செரிமானம் செய்வதற்கான சுரப்பிகளின் வழியாக வரும் திரவங்கள் சுத்தமாகச் சுரக்கின்றன.​ நீங்கள் உண்ணும் உணவின் சத்தை,​​ உடல் பெறுவதற்கான வாய்ப்பை இதன் மூலம் எளிதில் பெறலாம்.

தலைக்கு நீலிபிருங்காதிகேர ​(தேங்காய் எண்ணெய்)​ தைலத்தையோ,​​ கய்யுண்யாதி கேர தைலத்தையோ,​​ பஞ்சில் முக்கி தலையில் சுமார் 1 மணி நேரம் ஊறிய பின்பு குளிக்கவும்.​ இதனால்,​​ தலைபாரம் சளி ஜலதோஷம் ஏற்படாமலிருக்க,​​ ராஸ்னாதி சூரணத்தைக் குளித்தபிறகு உச்சந்தலையில் தேய்த்துவிடவும்.

நீங்கள் ஆணாக இருப்பதால் திங்கள் -​ புதன் -​ சனிக்கிழமைகளில் உடலுக்குப் பலாஅஸ்வகந்தாதி குழம்பு,​​ பிரபஞ்சன விமர்தனம் குழம்பு போன்ற தைலங்களில் ஒன்றை உடலெங்கும் தேய்த்து சுமார் 1 மணி நேரம் வரை ஊறிக் குளிக்கவும்.

இருமாதங்களுக்கு ஒரு முறை அவிபத்தி சூரணத்தை 7 முதல் 10 கிராம் வரை எடுத்து,​​ 12 முதல் 15 மி.லி.வரை தேன் குழைத்து,​​ காலையில் குடித்த கஞ்சி செரித்து பசி எடுத்தவுடன் நக்கிச் சாப்பிட,​​ 4 -​ 6 முறை நீர்ப் பேதியாகி குடலில் தேங்கியிருந்த தேவையற்ற பித்தம் வெளியேறிவிடும்.​ இதன்மூலம் கல்லீரல் மற்றும் மண்ணீரல் பகுதி சுத்தமடைவதால்,​​ உடல் யந்திரங்களின் மிக முக்கிய யந்திரமான கல்லீரல் பகுதியை நீங்கள் சுத்தமாக்கிக் கொள்ளலாம்.

மனதில் அமைதியுடன் வாழத் தீர்மானித்துவிட்ட நீங்கள்,​​ உடலின் ஆரோக்கியத்தையும் பாதுகாக்கக் கூடிய உணவு வகைகளைத் தேர்ந்து எடுத்துச் சாப்பிட்டு வரவும்.​ காலையில் ஓட்ஸ் கஞ்சி அல்லது புழுங்கலரிசிக் கஞ்சி,​​ பசு நெய்யும் சிட்டிகை உப்பும் கலந்து வெதுவெதுப்பாகச் சாப்பிடவும்.​ குடித்த கஞ்சி செரித்தவுடன் சூடான புழுங்கலரிச் சாதம்,​​ முருங்கைக்காய்,​​ சின்ன வெங்காயம் சேர்த்து அரைத்துவிட்ட சாம்பார்,​​ பசுநெய் கலந்து சாப்பிட்ட பிறகு,​​ மிளகு,​​ சீரகம் சேர்த்த தக்காளி ரசம்,​​ அதிலுள்ள கொத்தமல்லியுடன் சாதம் பிசைந்து சாப்பிடவும்.​ ஏடு படிந்த கெட்டித் தயிர்ச்சாதம் அதன் பிறகு சாப்பிடவும்.​ கறிவேப்பிலைத் துவையல்,​​ கொத்தமல்லி சட்னியை அதிகம் தொட்டுச் சாப்பிடப் பயன்படுத்தவும்.​ வேக வைத்த புடலங்காய்,​​ வெள்ளரிக்காய்,​​ மிளகு,​​ சீரகம் ,​​ தேங்காய்,​​ மிளகாய் சேர்த்த கூட்டு சாப்பிட மிகவும் நல்லது.

மாலை வேளைகளில் ஏதேனும் பழ வகைகள் சாப்பிடவும்.​ கொய்யாப் பழம்,​​ ஆப்பிள்,​​ திராட்சை,​​ மாதுளம்பழம்,​​ அன்னாசி,​​ பப்பாளி,​​ பூவன் வாழைப் பழம்,​​ நேந்திரம் பழம்,​​ மலை வாழைப் பழம்,​​ நெல்லிக்கனி,​​ பேரீச்சம்பழம்,​​ சீதாப் பழம் மற்றும் இதர பழ வகைகளை மெனு ஒன்று தயாரித்து மாற்றி மாற்றி சாப்பிட்டு வரவும்.

இரவில் கோதுமை ரவை உப்புமா,​​ கோதுமை சப்பாத்தி,​​ பச்சைப் பயறு வேக வைத்து,​​ சின்ன வெங்காயத்துடன் தயாரிக்கப்பட்ட கூட்டு போன்றவை சாப்பிட உகந்தது.​ பசி நன்றாக இருந்தால் ஆயுர்வேதத்தின் மிகச் சிறந்த லேகியமாகிய சியவனபிராசத்தை காலை மாலை வெறும் வயிற்றில் 10 கிராம் அளவு வரை நக்கிச் சாப்பிட்டு வரவும்.

பேராசிரியர் எஸ். சுவாமிநாதன்,