Monday, February 8, 2010

முஸ்லிம்கள் மாமிசம் உண்பது ஏன்?

இப்போதெல்லாம் காய்கறி (சைவ) உணவு முறை என்பது ஒரு இயக்கமாகவே ஆகிவிட்டது. பலர் இதனை விலங்கு உரிமையுடன் தொடர்புபடுத்தியும் பார்க்கின்றனர். உண்மையில், பலர் இறைச்சி மற்றும் வேறுவகை அசைவ உணவு என்பது விலங்கு உரிமைக்கு எதிரானது என்று கருதுகின்றனர்.

உயிர் வாழும் அனைத்து உயிரிடத்தும் கருணையும் இரக்கமும் காட்ட வேண்டும் என்றே இஸ்லாம் போதிக்கின்றது. ஆனால் அதே சமயம், அல்லாஹ் இவ்வுலகிலுள்ள அற்புதமான செடி கொடி மற்றும் விலங்கினங்களையும் படைத்ததே மனிதனின் நன்மைக்காகத்தான் என்பதையும் இஸ்லாம் நிலை நிறுத்துகிறது. இவை அல்லாஹ் மனிதனுக்கு அளித்திருக்கும் ஒரு நிஃமத் (அருட்கொடை) மற்றும் ஒரு அமானத் (trust அல்லது ஒருவர் மீது வைக்கும் நன்னம்பிக்கை). ஆகவே, இவற்றை நீதியான நெறிமுறையின் அடிப்படையில் எவ்வாறு பயன்படுத்துவது என்பது மனிதனைப் பொறுத்தது.

இந்த தர்க்கத்தை பல்வேறு கோணங்களில் இருந்து இப்போது ஆராயலாம்.
1. ஒரு முஸ்லிம் சுத்த காய்கனி (சைவ) உணவு மட்டுமே உண்பவராக இருக்க முடியும்.

2. ஒரு முஸ்லிம் சுத்த காய்கனி (சைவ) உணவு மட்டுமே உண்பவராகவும் அதே சமயம் மிகச் சிறந்த முஸ்லிமாகவும் வாழ முடியும். அசைவ உணவு சாப்பிட வேண்டும் என்பது ஒரு முஸ்லிமுக்குக் கட்டாயம் இல்லை.

3. முஸ்லிம்கள், (அவர்கள் ஆசைப்பட்டால் அல்லது அவசியப்பட்டால்) அசைவ உணவு உட்கொள்ள குர்ஆன் அனுமதி அளிக்கிறது. இதற்குக் கீழ் வரும் குர்ஆன் வசனங்கள் ஆதாரமாகும்.

a. இறை நம்பிக்கை கொண்டவர்களே! (நீங்கள் செய்து கொண்ட வாக்குறுதிகளை) உடன்படிக்கைகளை நிறைவேற்றுங்கள். உங்களுக்கு (குறிப்பாகச்) சொல்லப்பட்டவை தவிர மற்ற அனைத்து நாற்கால் பிராணிகளும் உங்களுக்கு (உண்பதற்கு) ஆகுமானவையாக ஆக்கப்பட்டுள்ளன. (குர்ஆன் 5:1)

b. இன்னும் கால்நடைகளையும் அவனே உங்களுக்காகப் படைத்தான். அவற்றிலிருந்து நீங்கள் (அவற்றின் தோல் மூலம் கிடைக்கும் ஆடைகளில் இருந்து) கதகதப்பையும் இன்னும் பலவித பலங்களையும் அடைகிறீர். மேலும் அவற்றை (உங்கள் உணவாக) உண்ணவும் செய்கிறீர்கள். (குர்ஆன் 16:5)

c. இன்னும் (ஆடு, மாடு, ஒட்டகம் முதலிய) கால்நடைகளில் உங்களுக்கு ஒரு படிப்பினை உண்டு. அவற்றின் உடலுக்குள்ளிருந்து சுரக்கும் பாலை நீங்கள் அருந்துகிறீர்கள். இன்னும் அவற்றில் உங்களுக்கு பலவித பயன்கள் உள்ளன. அவற்றின் மாமிசத்தை (உணவாக நீங்கள்) புசிக்கிறீர்கள். (குர்ஆன் 23:21)

4. புலால் உணவு சத்துமிக்கது.
இறைச்சி என்பது புரோட்டீன், இரும்புத் சத்து, விட்டமின் பி1 மற்றும் niacin. அடங்கிய செறிவான உணவு. புரோட்டீனுக்கான சிறந்த ஆதாரம் அசைவ உணவே.

5. மனிதர்களின் பற்கள் மாமிசம் உண்ணும் மிருகங்களைப் போன்றே அமைந்துள்ளன.
இலைதளைகளை உண்டு வாழும் மாடு, ஆடு இவற்றின் பல் அமைப்பை நீங்கள் கூர்ந்து கவனித்தால் அவற்றுக்கிடையே ஆச்சரியமான ஒரு ஒற்றுமையைக் காண முடியும். இவை அனைத்தும் தட்டையான / சீரான பற்களைக் கொண்டுள்ளன, அதாவது தாவர உணவை உட்கொள்ள வசதியாக. அதே சமயம் மாமிசம் உண்ணும் சிங்கம் அல்லது புலி இவற்றின் பல் அமைப்பைக் கவனித்தால் அவை கூரான பல் அமைப்பைக் கொண்டிருப்பதைக் காணலாம், அதாவது மாமிச உணவை உண்ணுவதற்கு வசதியாக.

ஆனால் மனிதர்களின் பல் அமைப்பை நீங்கள் கவனித்தால் அவை தட்டையாகவும் அதே நேரம் கூராக பற்களையும் கொண்டிருப்பதைக் காணலாம். மாமிசம் மற்றும் தாவர உணவு இரண்டையும் உண்ணுவதற்கு வசதியாக இவை உள்ளன. சர்வ வல்லமை உள்ள இறைவன் மனிதனை தாவர உணவு மட்டுமே உண்ணும் பிறவியாகப் படைக்க விரும்பியிருந்தால், கூரான பற்களையும் வைத்து ஏன் படைக்க வேண்டும்? தர்க்க ரீதியாகப் பார்த்தால், இறைவன் மனிதனை இருவகை உணவையும் உண்ணும் விதமாகவே படைத்தது நிரூபணமாகும்.

6. மனிதனால் தாவரம் மற்றும் மாமிச உணவு இரண்டையுமே ஜீரணிக்க முடியும்.
தாவர உண்ணிகளின் ஜீரண மண்டலம் தாவரத்தை மட்டுமே ஜீரணிக்க முடியும். அது போன்றே, மாமிச உண்ணிகளின் ஜீரண மண்டலம் மாமிசத்தை மட்டுமே ஜீரணிக்க முடியும். ஆனால் மனிதனால் மட்டுமே தாவரம் மற்றும் மாமிசத்தை ஜீரணிக்க முடியும். தாவர உணவை மட்டுமே உண்டு வாழுமாறு மனிதனை இறைவன் படைத்திருந்தால், ஏன் இருவகை உணவையும் ஜீரணிக்குமாறு மனிதனது ஜீரண மண்டலத்டைப் படைக்க வேண்டும்?

7. ஹிந்து வேதங்கள் அசைவ உணவை உண்ண அனுமதிக்கின்றன.
அ. அனேக ஹிந்துக்கள் அசைவ உணவு தங்கள் மதத்திற்கு எதிரானது எனக் கருதி சைவ உணவு மட்டுமே உட்கொண்டு வருகின்றனர். ஆனால் அவர்களின் வேதங்கள் அசைவ உணவை அனுமதிக்கின்றன. அவர்களின் ஞானிகளும் முனிவர்களும் அசைவ உணவு உட்கொண்டதற்கான ஆதாரங்கள் உள்ளன.

ஆ. அயோத்தியாக் காண்டத்திலே வசனம் 20, 26 மற்றும் 94 இவற்றில் ராமர் வனவாசம் செல்லும்போது தனது ருசியான அசைவ உணவைத் தியாகம் செய்வதாகத் தனது அன்னையிடம் கூறியதாகக் கூறப்படுகிறது. இதன்மூலம் அவர் அசைவ உணவை விரும்பி உட்கொண்டதாகத் தெரிகிறது. ராமர் அசைவம் உட்கொள்ளுமிடத்து, மற்ற ஹிந்துக்கள் என் உட்கொள்ளக் கூடாது?

8. ஹிந்து மதம் மற்ற மதங்களின் ஆளுமைக்கு உட்பட்டது.
தங்கள் சொந்த மதத்தில் அசைவம் உண்ண அனுமதி இருந்தும் அனேக ஹிந்துக்கள் மற்ற (ஜைன மதம் போன்ற) மதங்களின் ஆளுமைக்குட்பட்டு சைவ உணவை பின்பற்றுகின்றனர்.

9. தாவரங்களுக்கும் உயிர் உள்ளது.
சில மதங்கள் உயிர்களைக் கொல்லுவதற்கு எதிராக சைவ முறையைப் பின்பற்றுகின்றனர். எந்த உயிரையும் கொல்லாமல் மனிதன் உயிர் வாழ முடியும் எனில், அத்தகைய முறையைப் பின்பற்றும் முதல் ஆளாக நானிருப்பேன். ஆனால் தாவரங்களுக்கும் உயிர் உள்ளது என்ற உண்மை நிரூபிக்கபட்ட பின்னர் உயிர்களைக் கொள்ளாமல் சுத்த சைவமாக வாழ முடியும் என்கிற அவர்களது வாதம் இங்கு தோற்றுவிடுகிறது.

10. தாவரங்களும் வலியை உணர்கின்றன.
அவர்களது இன்னொரு வாதம் என்னவென்றால், தாவரங்கள் வலியை உணர்வதில்லை. ஆனால் அறிவியலோ வேறுவிதமாகக் கூறுகிறது. வித்தியாசம் என்னவென்றால் அவற்றின் நுண்ணிய கதறலை நம்மால் உணர முடியாது, அவ்வளவே. மனிதனால் 20 ஹெர்ட்ஸ் முதல் 20,000 ஹெர்ட்ஸ் வரை உள்ள சத்ததைக் கேட்க முடியாது. ஆனால் ஒரு நாயால் 40000 ஹெர்ட்ஸ் வரை காதால் கேட்க முடியும். தண்ணீர் கேட்டு அழும் ஒரு தாவரத்தின் குரலை ஒரு நவீன கருவி கொண்டு பதிவு செய்து நிரூபணம் செய்திருக்கிறார் ஒரு விவசாயி.

11. இரண்டு அறிவு குறைவாக உள்ள ஒரு பிராணியைகக் கொல்வது ஒன்றும் குறைவான குற்றமாகாது. தாவரங்கள் இரு அறிவு உள்ளவை என்றும் மிருகங்கள் ஐந்து அறிவு உள்ளவை என்றும் ஒரு சைவப் பிரியர் வாதாடினால், குறைவான அறிவுள்ள ஒரு ஜீவனைக் கொள்வது அவரைப் பொறுத்தவரை சிறிய குற்றம்.

ஒரு உதாரணம்: ஒருவர்க்கு காது கேளாத, வாய் பேசாத ஒரு தம்பி உள்ளார். அவர் சாதாரண மனிதனைவிட இரண்டு அறிவு குறைவானவர். ஒருவன் அவரைக் கொலை செய்துவிட்டான் என்று வைத்துக் கொள்வோம். ஆறறிவுள்ள ஒருவனைவிட குறைவான அறிவுள்ள ஒருவனைக் கொலை செய்தததற்காக குறைவான தண்டனை தருமாறு அவன் வாதாட முடியுமா? (உண்மையில் அவன் ஒரு அப்பிராணியைக் கொலை செய்ததற்காக அதிகமான தண்டனையல்லவா அவனுக்குத் தர வேண்டும்?) ஆனால் இஸ்லாம் இதுபோன்ற வாதத்தை அடிப்படையாகக் கொள்வதில்லை.

மனிதனுக்கு எவ்வகை மாமிசம் அனுமதிக்கப்பட்டுள்ளது மற்றும் எவ்வகை மாமிசம் உண்ண அனுமதியில்லை என்பதை குர்-ஆன் கூறுகிறது.

“அல்லாஹ் உங்களுக்குத் தடை செய்துள்ளது (என்னவென்றால்) தானாக இறந்ததும், இரத்தமும், பன்றி இறைச்சியும் மற்றும் அல்லாஹ் அல்லாத பெயர் கூறி அறுக்கபட்டவையும். ஆனால் எவரேனும், பாவம் செய்யாத நிலையில் வரம்பு மீறாமல், நிர்பந்தத்தின் பேரில் இவற்றை உண்ண நேர்ந்தால், அவர் மீது குற்றமில்லை. அல்லாஹ் கருணை மிக்கோன், மிக மன்னிப்பவன். (குர்-ஆன் 2:173)

குர்-ஆன் கூறுகிறது: மனிதர்களே, பூமியில் அனுமதிக்கபட்டவற்றையும், பரிசுத்தமானவற்றையும் உண்ணுங்கள். (குர்-ஆன் 2:168)